Wednesday, July 25, 2012

Holiday in handcuffs/ ஹாலி டே இன் ஹான்ட் கப்ஸ் /ஹாலிவுட் சினிமா விமர்சனம்

சில நேரங்களில் எதிர்பாராத தருணங்கள் அல்லது விஷயங்கள் உங்களை சந்தோசத்தின் அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விடும். எதிர்பார்க்காமல் சந்திக்கும் புதிய மனிதர்கள் உங்களின் வாழ்க்கை பாதையையே மாற்றி போட்டுவிடலாம். இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருவது ஒன்றுதான் "அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம் " என்பதுதான். அதை மெய்ப்பிக்கிற மாதிரியான ஒரு படம் தான் இது !

ரொமாண்டிக் காமெடி வகை படங்களின் இன்னொரு வகையான பரிமாணம் தான் இந்த படம். உண்மையில் எனக்கு தோன்றுவதுண்டு எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறார்கள் படம் எடுக்க என்று. என் நண்பர் ஒருவரின் பரிந்துரைப்பின் பேரில் பார்த்த படம் என்றாலும் என்னை ஏமாற்ற வில்லை. இது முழுமையான ஹாலிவுட் படமல்ல, இது ஒரு டெலிவிசன் மூவி .


படத்தின் கதையை ரொம்பவும் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். "ட்ருடி" ஒரு உணவகத்தில் பரிமாறுபவராக பணிபுரிகிறாள். ஆனாலும் இவளுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆர்வம். இந்த தடவை கிறிஸ்மஸ் அன்று தனது காதலனோடு அவள் அப்பா அம்மாவை சந்திப்பதாக வாக்குறுதி கொடுக்கிறாள். ஆனால் அதே நாள் அவளை விட்டு பிரிந்து செல்வதாக சொல்கிறான். செய்வதையாது திகைக்கும் ட்ருடி, அந்த உணவகத்துக்கு வந்திருக்கும் டேவிடை துப்பாக்கி முனையில் கடத்தி செல்கிறாள் அவள் பெற்றோருடன் கிறிஸ்மஸ் கொண்டாட. மீதி கதையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் !!!

 படத்தின் பலமே ட்ருடீயாக நடித்திருக்கும் (Mellisa Joan Hart) தான் என்றால் அது மிகை  இல்லை. முதல் காட்சியிலே எவ்ளோ சோம்பேறி அப்படின்னு புரிஞ்சிடும். சாப்பாட்டை  சூடாக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தும் ஒரு காட்சி. டேவிடை கடத்தி போய்  வீட்டில் விட்டு வீட்டில் ட்ருடீயின் அம்மா அப்பா என எல்லோரும் டேவிடை பிடித்து போக டேவிடிடமே " என் வீட்டில் என்னை விட எல்லோருக்கும் உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு என பொறாமைப்படும் காட்சி.

 ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்கள் அதை சுவாரசியமாக சொன்ன திரைக்கதை என பார்க்கும் ரசிகனை சங்கடபடுத்தாமல் சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். இன்னொரு பலம் என்றால் அது பாத்திர தேர்வு, எல்லா கதாபாத்திரங்களும் இந்த கதைக்கு நூறு சதவீதம் பொருத்தம். டேவிட் , ட்ரூடி மீது காதல் கொள்ள வரும் காட்சிகள் நம்பும்படியாகவும் , ரசிக்கும்படியாகும் இருக்கு. படத்தை முதலில் பார்க்க ஆரம்பித்தபோது பெரியளவில் என்னை கவரவில்லை என்பது உண்மை, ஆனாலும் முடிவில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு!!!


 முழு படமும் you tube கிடைக்கிறது அதன் இணைப்பை கிழே   கொடுத்துள்ளேன்

Monday, July 16, 2012

தி ஹாலி டே/ஹாலிவூட் சினிமா விமர்சனம்

காதலால் ஏற்படும் சந்தோசங்களை விட அது தரும் வேதனை அதிகம். காதலனோ/காதலியோ கிடைக்கும்போது ஏற்பாடு சந்தோசங்களை விட அவர்களின் பிரிவு தரும் கஷ்டம் அதை உணர்ந்தவர்களுக்கே புரியும். என்ன காதலை பத்தி ஓவரா பீலா விடுற மாதிரி இருக்கேன்னு கடுப்பாக வேணாம். இந்த படத்தின் கதை அப்படி.

கதையை சுருக்கமா சொல்லிடறேன், ரெண்டு பெண்கள் அவங்க காதலர்களால் பிரச்சினை, ஒருத்தர் அமெரிக்கால இருக்கார் (கமரூன் டியஸ்) இன்னொருத்தர் இங்கிலாந்தல இருக்கார் (கதே வின்ஸ்லெட்). இரண்டு பேரும் வீட்டை ரெண்டு வாரத்துக்கு மட்டும் மாத்திக்க முடிவு பண்ணி கெளம்பி போறாங்க. போற இடத்துல ரெண்டு பேருக்கும் புது காதலர்கள் கிடைக்க முடிவு சுபம்.

கதை ரெண்டு வரில சொல்லிட்டாலும் படம் நமக்குள்ள ஒருவித குதூகலத்தை கொண்டு வரும் அப்படிங்கறதுல சந்தேகமே இல்லை, நமக்கு புடிச்ச பொருளோ இல்லை வாலிப வயதில் வரும் காதலோ அந்த மாதிரி  ஒரு உற்சாகம். ரெண்டு பெண் பாத்திரமும் வித்தியாசமா காட்டி இருக்கும் இயக்குனர்  அவருக்கு பெரிய பாராட்டுதல்கள். இரண்டு பேரில் என்னை ரசிக்க வைத்தது கமரூன் மட்டுமே. வித்தியாசமான முக பாவங்களை மாற்றி கொள்வது ரொம்பவே அழகு.

கதேவுக்கு ரொம்ப பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அந்த டைட்டானிக்  அழகி அடிக்கடி மனதிற்குள் வந்து போவதால், படத்தோடு  ஒட்டி ரசிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த பாத்திரத்திற்கு  வேறு யாரையும் பொருத்தி பார்க்கவும் இயலாது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து கமரூன் வீட்டில் நுழைந்தவுடன் இவர் அடையும்  பரவசம் ரொம்ப சிறப்பு .

கமரூன் டைஸ் , இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருக்கிறார். தன்  காதலன் இன்னொரு பெண்ணுடன்  தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அவனை வெளியில் தள்ளி விட்டு கோபப்படுவது  ரசிக்கலாம். முதல் பாதியை  விட இரண்டாம் பாதியில் இன்னும் ரசிக்கலாம்.

படத்தின் இயக்குனர் "நான்சி மேயர்", பெண் இயக்குனர் என்பதால் மெல்லிய பெண் உணர்வுகளை படம் பிடித்திருப்பது  அழகு. இரண்டும் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்திருந்தாலும் அதை வித்தியாச படுத்தி கட்சி அமைத்ததர்க்கே இயக்குனரை பாராட்டலாம். ஆனாலும் விக்ரமன் பட பாணியில் சில காட்சிகள் (ஒரு பாட்டில் பணக்காரன் ஆகும் கதாநாயகன்) இருந்தாலும் மனம் விட்டு ரசிக்கலாம். மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு படம். என்னை மாதிரி ரொமாண்டிக் காமெடி படத்தை ரசிப்பர்வர்களுக்கு இது ஒரு நல்ல படம்.

படத்தின் முன்னோட்ட காணொளியை இணைத்துள்ளேன் !!!


Saturday, April 7, 2012

No Strings Attached /ஹாலிவூட் சினிமா விமர்சனம்/18+ மட்டும்

சில நேரங்களில் உடன் இருக்கும்போது சில மனிதர்களின் மீதுள்ள  மதிப்போ அல்லது காதலையோ நாம் உணர்வதில்லை. அவர்களின் இன்மையின்போதுதான் ஏதோ ஒரு மதிப்பு மிக்க பொருளை இழந்துவிட்டது போல் ஆர்ப்பரிப்போம். அதை இழந்துவிட்டோமே என்ற உணர்வே நம்மை கொல்லாமல்  கொன்றுவிடும்.

உனக்கும் எனக்கும் எந்த ஒட்டுதலும் வேண்டாம் எந்த உணர்வுகளும் வேண்டாம் ஒன்லி செக்ஸ் மட்டும் போதும். உனக்கு தேவையாக இருக்கும்போது என்னை பயன்படுத்திகொள் எனக்கு தேவை உள்ளபோது உன்னை பயன்படுத்திகொள்கிறேன் என்ற ஒப்பந்தத்தோடு உறவை ஆரம்பிக்கும் இரு நண்பர்கள், ஒருவருக்கு மற்றோவர் மேல் காதல் பிறக்க  இறுதியில் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே இந்த படத்தின் கதை சுருக்கம்.


நல்ல நண்பர்கள் காதலில் விழும் சாத்தியகூறுகள் அதிகம், அதை போலத்தான் இந்த படமும். சின்ன வயதில் இருந்தே நண்பர்கள், எம்மாவும் (Natalie Portman) ஆடமும் (Aston Kutcher),  தன் தந்தையின் இறுதி சடங்கிற்கு அழைப்பதில் இருந்து  இவர்களின்  நட்பு பரிமளிக்கிறது. நெடு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் இருவருக்குள்ளும் பெரிய மாறுதல் இல்லை. இரண்டு பேருக்கும் வெவ்வேறு விதமான நெருக்கடிகள். ஆடமுக்கு தன் பெண் நண்பியை தன் தந்தை உறவு கொள்கிறாரே என்று. எம்மாவுக்கு மருத்துவம் தொழில், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை, காதலிக்கவோ வேறு எதற்கோ நேரம் இல்லை. அந்த நிலையில்தான் "ஒன்லி செக்ஸ் நோ செண்டிமெண்ட்ஸ்" என்ற முடிவுக்கு வருகிறார்கள்.


படத்தின் இயக்குனர் Ivan Reitman ஏற்கனவே எனக்கு பிடித்த படமான "Six days Seven Nights" என்ற படத்தை இயக்கியவர்.   மனிதர் பெண்களின் மனதிற்குள் போய் எப்படி சில நுணுக்கமான விஷயங்களை கண்டுபிடித்தார் என்பது கொஞ்சம் ஆச்சர்யம். தனக்கு நெருக்கமான ஆண்களிடம் இன்னொரு பெண் பேசுவதை கூடபெண்களால் பொறுத்துக்கொள்ள முடியாது அதை படம் பிடித்த விதம் அழகு. ஒவ்வொரு பிரேமையும் இளமையாக காட்டவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்தது போல் இருக்கிறது . அதற்கு இயக்குனருக்கு சபாஷ் !!!

நடாலி போர்ட்மன், முகத்தில் ஏதோ   ஒரு சோகம் அப்பி கொண்டதைப்போல முகம்.சமீப காலங்களில் இவரை அதிகமாகவே பிடிக்கிறது எனக்கு. மருத்துவ தொழிலில் இருப்பதால் எனக்கு காதலிக்க எல்லாம் நேரம் இல்லை, எனக்கு தேவையானபோது என் மஞ்சத்தில் ஒரு ஆண் தேவை அது நீயா இருந்துவிட்டு போயேன் என குட்சரிடம் சொல்வது நம்ம ஊருக்கு ஒவ்வாதது என்றாலும் இப்படி கூட நடக்கிறது போலும் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். குட்ச்சர் வேறு பெண்களுடன் உறவு கொள்ள போகிறார் என தெரிந்து பொறாமையில் மீண்டும் அவர் வீட்டுக்கே போய் அந்த பெண்களிடம் வம்பு செய்வது ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் படம் 120 நிமிடங்களும் ரசித்து பார்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. இது ஒரு  நல்ல பொழுதுபோக்கு படம் மட்டுமே. படத்தின் ட்ரைலர் கிழே.


அடுத்த பதிவில் நல்ல படத்தின் விமரிசனத்துடன் சந்திக்கிறேன்.

Monday, March 26, 2012

ஹாலிவூட் சினிமா விமர்சனம்/Forgetting Sarah Marshall/18+ மட்டும்

ரொமாண்டிக் காமெடி வகையறா படங்கள் எடுப்பதில் நம்ம ஆட்களை மிஞ்ச ஆள் இல்லை என்றாலும், இவர்கள் பாணியே வேறு. காதல் அதனால் வரும் பிரச்சினை இறுதியில் இணைவார்கள் நடுவில் நடக்கும் விசயங்களில் கொஞ்சம் பப்பி சேம் கலந்து கட்டி சொல்வார்கள். "பர்கேட்டிங் சாரா மார்ஷல்" (Forgetting Sarah Marshall) படமும் ரொமாண்டிக் காமெடி வகையை சார்ந்ததே.

காதலியை விட மனமில்லாமல் வாதாடும் பீட்டர்
2008-இல், "நிக்கோலஸ் ஸ்டோளர்" இயக்கத்தில், Universal Studio வெளியீட்டில் வந்த படம். " காமெடி பெஸ்டிவலில் இந்த படம் 2008-இல் வெளிவந்த சிறந்த காமெடி படமாக தேர்வு செய்யப்பட்டது.

சாரா தன் புது காதலனுடன்
கதையை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். பீட்டர் ஒரு மியூசிக் கம்போசர். அவன் காதலி சாரா மார்ஷல், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான "Crime Scene: The Scene of the Crime" -இன் கதாநாயகி, அதே நிகழ்ச்சியின் பின்னணி இசைகோர்ப்பு பணிகளை செய்பவன் பீட்டர். ஒரு நாள் திடீரென பீட்டரிடம் இருந்து பிரிந்து செல்வதாக சொல்கிறாள் சாரா. மனமுடையும் பீட்டர், அமைதி தேடி ஹவாய் செல்கிறான்.

இவன் தங்க போகும் அதே ஹோட்டல் ஒன்றில் சாரா மற்றும் அவளுடைய புதிய காதலன் (Russel Brand) இருக்கும்போது சந்திக்கிறான். காதலியை மறக்கமுடியாமல் தவிக்கும் பீட்டருக்கு அந்த ஹோட்டலில் பணிபுரியும் ரசேல் (Mila Kunis) உடன் காதல் வருகிறது. ஆனால் சாராவும் அவள் புதிய காதலனுக்கும் இடையில் பிரச்னை எழுந்து பீட்டரை மறுபடியும் இணைந்து வாழ அழைக்கிறாள் சாரா. புதிய காதலிக்கும் பழைய காதலிக்கும் இடையில் சிக்கிய பீட்டர் என்ன முடிவு செய்தான் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!.


ஒரு படம் நம்மை சிரிக்கவைக்கவும், அழ வைக்கவும், நெகிழ வைக்கவும் வேண்டும், அப்படி ஒரு படம் தான் இது. படத்தில் முக்கிய அம்சமே காஸ்டிங் தான். இவர்களை சரியான இடத்தில் பொருத்தி இருப்பதே படத்தின் பெரும் பலம். காதல் தோல்வி அடைந்தவர்கள் நம்ம ஊரில் மட்டுமல்ல இங்கேயும் அப்படித்தான் போல.


சரி போகட்டும், ஜாசன் செகல் பத்தி கொஞ்சம் பேசலாம்... இவரே எழுதி பீட்டர் கதாபாத்திரத்திலும் நடிச்சிருக்கார் , உண்மையை சொல்லனும்னா அதுக்கு justify  பண்ணி இருக்கார். இவர் முகம் காதல் தோல்வியின் மென் சோகத்துக்கு நல்லாவே செட் ஆகுது. முதல் சீன்ல இருந்து மனுஷன் நம்மளை சிரிக்க வைக்க ஆரம்பிச்சுடறார்.காதலி விட்டுட்டு போனதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அழறதும், அவளை மறக்க அவளுக்கு புடிச்ச இடமான ஹவாயக்கே போறதும்னு, இன்னும் நெறைய இருக்கு இவர பத்தி சொல்றதுக்கு.அடிக்கடிபிறந்த மேனிக்கு நிக்கறதுதான் கொஞ்சம் எரிச்சலா இருக்கு.

மிலா குனிஸ் பத்தி ரெண்டு வார்த்தை சொல்லாம இந்த பதிவை முடிக்க மனமில்லை. ரஷ்யன் பொண்ணு, குரல் கொஞ்ச கர கரன்னு இருக்கு , கண்ணு கொஞ்சம் பெரிசு. மத்த இத்யாதிகள் எல்லாம் நீங்களே பார்த்துகிடுங்க.  படத்தின் ட்ரைலர் கிழே!!!


Monday, March 12, 2012

What Happen in Vegas/ரொமாண்டிக் காமெடி / ஹாலிவூட் சினிமா விமர்சனம்

அன்றாடம் நாம் எத்தனையோ மனிதர்களை எதிர்கொள்கிறோம்,  சந்திக்கிறோம் ஆனாலும் எல்லோரிடத்திலும் நமக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்றுதான் நம்மை அவர்கள் பால் இழுத்து செல்கிறது. காதல்வயப்படுவது இப்படித்தான் போலும். ரொம்ப பிலாசபி பேசியாச்சி நேரா மேட்டருக்கு வருவோம்.
தன் காதலின் முறிவை மறக்க நியூயோர்க்கில் இருந்து லாஸ்வேகாஸ்  பயணமாகிறார் Joy Ellis McNally (Camaroon Diaz). பேர் ரொம்ப நீளமா இருக்கு நாம ஜோய்னு வச்சுக்குவோம். மறுபுறம் ஒழுங்கா வேலை செய்ய தெரியலைன்னு மகனையே வேலையை விட்டு துரத்தற அப்பாவையும் அந்த சோகத்தையும் மறக்க லாஸ்வேகாஸ் வர்ற Jack Fuller (Aston Kutcher). எதிர்பாராத  சந்தர்ப்பத்துல சந்திக்கிற ரெண்டு பெரும் போதை அதிகமாகி ஒரு நைட்ல கல்யாணம் பண்ணிகறாங்க. மறுநாள் போதை தெளிஞ்சு விவாகரத்தை பற்றி பேசும் நேரம் ஜோய்க்கு சொந்தமான ஒரு நாணயத்தை போட்டு ஜாக் 3  மில்லியன் ஜாக்பாட் அடிக்கிறார். இப்போ பணம் யாருக்கு சொந்தம் அப்படின்னு கோர்ட் படி ஏறி நிக்கிறப்போ நாட்டமை (ஜட்ஜ்) என்ன சொல்றார்னா ஆறு மாசம் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்துட்டு வாங்க அப்புறம் பணம் தரேன் அதுவரைக்கும் கவேர்மெண்டே பணத்தை வசிருக்கும்னு சொல்லிடறார். அந்த ஆறு மாசமும் அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு வழக்கம் போல நீங்களே பார்த்துகிடுங்க !!
 படம் முழுக்கவே காமெடி அங்கங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுது. தனக்கு 3  மில்லியன்  ஜாக்பாட் அடிச்ச சந்தோசத்தில் இருக்கும்போது கண்ணா நமக்கு கல்யாணம் ஆய்டுச்சி ஒழுங்கா பாதி துட்ட எண்ணி வைன்னு அம்மணி மேலே மோதிரத்தை காட்டுது பாருங்க.  ஆறு மாசத்துக்குள்ஒருவரை ஒருவர் விரட்டி அடிக்க இவர்கள் போடும் திட்டங்கள்தான் படத்தின் திரைக்கதையையே நகர்த்தி செல்கிறது. கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை திரைக்கதையை மொத்தமும் சிரிக்கும்படி அமைத்ததுதான் பலம். 


கமரூன் டியசின்பெரிய ரசிகர் இல்லை என்றாலும் அம்மணி படத்தில் செய்யும் அட்டகாசங்களை முழுமையாக ரசிக்க முடிகிறது. கத்தியை கொண்டே ஷாம்பெய்ன் பாட்டிலை திறக்கும் லாவகதிற்க்கே யாம் அடிமை. வாழ்கையில் ரொம்ப சந்தோசமாக கடைசியாக எப்போது இருந்தாய் என கேட்க்கும் ஜாக்கிடம் யாருமில்லாத ஒரு கடலோரம் நின்றுகொண்டு கடல் அலைகளுடம் பேசிக்கொண்டு இருக்கும்போது என சொல்லும் ஜோயாக நல்லாவே நடித்திருக்கிறார்.

ரொமாண்டிக் காமெடி படங்களின் நிஜமான ஹீரோ என்றால் அது ஆஸ்டன்  குட்சேர் (Auston Kutcher) தான். தனக்கு  பிடிக்கா விட்டாலும் ஜாய் அழைத்ததை மறுக்க முடியாமல் அவளின் கம்பனி பார்ட்டிக்கு போய் அவளுடைய பாஸை இம்ப்ரெஸ் பண்ணுவது நல்ல காமெடி.

30 million பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 2008-இல் வெளியாகி  நல்ல வசூலை அள்ளியது (நன்றி -wikipedia). உலகப்பட வரிசையில் இதை சேர்த்து கொள்ளாவிட்டாலும் காமெடி  படம் பார்க்கும் பிரியர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படம் இது.

Monday, March 5, 2012

ஷுட்டெர் ஐலன்ட்/Shutter Island/ஹாலிவூட் சினிமா விமர்சனம்


த்ரில்லர் சினிமாக்களில் எனக்கு அலாதி பற்று உண்டு. ஒரு படம் முடிவு டைட்டில் கார்டு போடும் வரை நம்மை கட்டி போட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் நாம் படத்தை தவற விட்டாலும் எங்கே கதை விளங்காமல் போய்விடுமோ என்று தவிக்க வைக்க வேண்டும். என் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் படி இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. நல்லவேளை என் நண்பர் கதையை எவ்வளவோ வற்புரித்தியும் சொல்ல மறுத்துவிட்டார். நீயே பார்த்து தெரிந்துகொள் என்று சொல்லிவிட்டதனால் இந்த படத்தை பார்க்கும்படி நேர்ந்தது. 
2010-இல் "மார்டின் சகோர்செசே" (Martin Scorsese) இயக்கத்தில்,   "The Shutter Island"  என்ற பெயரில் "டென்னிஸ் லேஹனே" (Dennis Lehane) எழுதிய நாவலை மயமாக கொண்டு டைட்டானிக் படத்தின் புகழ் பெற்ற ஹீரோ லியோ டி காப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில்  வெளிவந்த  படம்.

படத்தின் கதையை நான் விரிவாக சொன்னால் படம் பார்க்கும் ஆவல் போய்விடும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியே ஒரு தீவில் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கபடுகிறது. தீடிரென ஒரு நாள் அந்த பாதுகாப்பான தீவை விட்டு ஒரு பெண் மன நோயாளி தப்பி சென்று விடுகிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க டி காப்ரியோவும் அவருடன் ஒரு காவலரும் அந்த தீவுக்கு வருகிறார்கள். அந்த பெண்ணை கண்டுபிடித்தனரா ? இல்லையா?? என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


படம் முழுக்க வியாபித்து இருப்பது டி காப்ரியோ தான். அந்த பெண்ணை கண்டுபிடிக்க இவர் கையாளும் முறைகளும், செருப்பே அணியாமல் அந்த பெண் எப்படி அந்த  தீவில் தப்பி வாழ்கிறார் என்பதை கண்டுபிடிக்க இவர் எடுக்கும் முயற்சிகளும் அபாரம். அந்த தீவிற்கு ஒரே ஒரு படகுதான் வந்து செல்ல பயன்படுத்துகிற நிலையில் இவருக்கு கனவில் சிறு குழந்தைகள் வந்து துன்புறுத்த இது அங்கு பணி புரியும் மருத்துவர்கள் செய்யும் தில்லு முல்லு என அதை ஆராய்வதும் படம் முழுக்க இவர் ராஜ்யம்தான்.


பென் கிங்கை பற்றி சொல்லாமல் இந்த பதிவை முடிக்க மனமில்லை.  அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், டி காப்ரியோ கேட்கும் கேள்விகளுக்கு இவர் தரும் அசராத பதில்களும் சலனமில்லாத இவரின் முக பாவங்களும் அடடா ரகம்.



மொத்தத்தில் ஒரு நல்ல சைகோ த்ரில்லர் படம் இது அதிக வன்முறை காட்சிகள் இல்லாமல். படத்தில் ட்ரைலரை இத்துடன் இணைத்துள்ளேன் உங்களுக்காக.

.
மீண்டும் அடுத்த படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்

Friday, March 2, 2012

The Proposal/தி ப்ரோபோசல்/ஹாலிவூட் சினிமா விமர்சனம்

ஒரு செய்தியை அறிவிக்க உங்கள் பெண் பாஸ்சின் அறைக்கு போகிறீர்கள், அங்கே உங்களை உள்ளே வர வைத்து இவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக உங்கள் பாஸ் கம்பனி டைரெக்டர்களிடம் உங்களை அறிமுகப்படுத்தினால் எப்படி இருக்கும். இந்த ஒரு லைனை மட்டும் வைத்துக்கொண்டு வெளிவந்த ஒரு அருமையான ரொமாண்டிக் காமெடி வகையான படம்தான் "தி ப்ரோபோசல்" (The Proposal).

Sandra Bullock தயாரிப்பில், Pete Chirelli எழுதிய கதையை இயக்கியவர் Anne Fletcher. ஒரு பாதி கதை நியூயோர்க்கிலும் மற்றொரு பாதி அலாஸ்காவிலும் கதை நகர்கிறது. ஹாலிவூடில் வெளிவந்த நல்ல ரொமாண்டிக் காமெடி  வகை படங்களில் இதுவும் ஒன்று.

கதைக்கு வருவோம், மார்கரெட் (Sandra Bullock) ஒரு பதிப்பகத்தில் முதன்மை எடிட்டர், இவர் கனடா நாட்டு பிரஜை இவருடைய விசா காலம் முடிந்து வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் தன்னிடம் உதவியாளராக இருக்கும் ஆண்ட்ருவை திருமணம் செய்யப்போவதாக கூற ஆண்ட்ருவுக்கு அதிர்ச்சி. தன்னை திருமணம் செய்தால் ஆண்ட்ருவை எடிட்டராக பணி உயர்த்த ஒத்துக்கொள்கிறார் மார்கரெட்.

immigrant ஆசாமிகளை  ஏமாற்ற ஆண்ட்ருவுடன் அவனுடைய சொந்த ஊரான அலாஸ்காவுக்கு    அவனுடன் செல்லும்  மார்கரெட், ஆண்ட்ருவின் குடும்பத்தின் வற்புறுத்தலின்பேரில் அங்கேயே திருமணம் செய்ய உத்தேசிக்கும் ஆண்ட்ருவின் குடும்பத்தாரின் அன்பில் மயங்கி உண்மையை ஒத்துக்கொண்டு கனடா கிளம்ப ஆயத்தமாகிறார் மார்கரெட். முடிவு என்ன என்பதை நீகளே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தின் பெரிய பலமே சண்ட்ராதான், ஆபீசில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம், ஆனால் இந்த பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் அடக்கி வசிக்க வேண்டிய நிலை. அலாஸ்காவில் இவர் படும் பாடு சிரிப்பு பட்டாசு.  தன் செல் போனை தூக்கி போகும் பருந்திடம் இருந்து அதை காப்பாற்ற நாய் குட்டியை தூக்கிக்கொண்டு நாயை எடுத்துக்கொண்டு செல் போனை தருமாறு ஒடுவதாகட்டும், கல்யாணத்தை அறிவிக்கும் போது எல்லோரும் முதமிடுக்கொள்ள கேட்க்க வேண்டா வெறுப்பாக முத்தம் கொடுப்பதாகட்டும், ஆண்ட்ருவின் பாட்டியுடன் சேர்ந்து ராப் பாட்டுக்கு நடனம் ஆடுவதாகட்டும் அங்கங்கே வெடி சிரிப்பு வரும்.

ஆண்ட்ருவாக ரேயான் ரெய்னோல்ட்ஸ் (Ryan Reynolds),  ஆரம்ப காட்சியிலேயே பாசுக்கு அடங்கிய பணியாளராக அவருக்கு காப்பி வாங்கிக்கொண்டு வருவதாகட்டும், சண்ட்ராவை மண்டியிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்க வைப்பதிலும் நன்றாகவே நடித்திருந்தார்.






மொத்தத்தில் நேரத்தை வீணாக்காமல் நல்ல படம் பார்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு இது உகந்த படம்.


அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.  

Wednesday, February 29, 2012

செவென்/Se7en/ஹாலிவூட் சினிமா விமர்சனம்

நல்ல டேடக்டிவ் சினிமாவை பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது. தமிழில் ஒரு சில படங்களே,  நான் சிகப்பு மனிதன் பாக்யராஜ், வேட்டையாடு விளையாடு  போல கொஞ்சமே நான் பார்த்திருக்கிறேன் என்பதால் இந்த படம் என்னை ரோமக கவர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் பிராட் பிட் வேறு நடித்திருப்பதால் என்னை பார்க்க தூண்டியது. 

கதையை நான் நிறைய சொன்னால் படம் பார்க்கும் ஆவல் போய்விடும் என்பதால் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். குற்றங்கள் நிறைந்த அமெரிக்க நகரத்தில் கொடூரமான ஒரு கொலை நடக்கிறது, அதை தொடர்ந்து இன்னொன்று என இரண்டு கொலைகள். இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்கின்றனர் சொமேர்செட் (Morgan FreeMan) மற்றும் டேவிட்  (Brad pitt) என்ற இரண்டு டேடேக்டிவ்களும். சொமேர்செட் இன்னும் ஒரு வாரத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகிறவர், டேவிட் இப்போதுதான் அந்த நகரத்தில் தன பணியை ஆரம்பிக்கிறார்.

சொமேர்செட் தன் அனுபவத்தில் அந்த சைக்கோ கொலைக்காரன் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது போல ஏழு பாவங்களை போல ஏழு கொலைகள் செய்யப்போகிறான் என்று யூகிக்கிறார். அந்த ஏழு கொலைகளையும் அந்த கொலைகாரன் செய்தானா இல்லையா?? அவனை இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனரா?? என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

பிராட் பிட்டும், மோர்கன் ப்ரீமனும் வித்தியாசமான கூட்டணி. பிராட் பிட் அசுர வேகம் என்றால், மோர்கன் விவேகமும் பொறுமையாகவும் ஒவ்வொரு விசயங்களையும் கையாள்கிறார். இவர்களின் பாத்திர படைப்பு மிகவும் சுவாரசியமானது. ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகும் தான் எதற்கு இந்த கேசில் முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறார் மோர்கன்.

என்னை ரொம்பவும் கவர்ந்தது   மோர்கன் பிரீமனின் நடிப்பே. அலட்டிகொள்ளாத அதே சமயம் பொறுமையும், புத்திசாலித்தனமாகவும் முடிவெடுக்கும்  பாங்கு என படம் முழுவதும் அட்டகாசப்படுத்தி இருக்கிறார் மோர்கன்.
 பிராட் பிட்டிக்கு இந்த மாதிரி வேடம் நன்றாகவே பொருந்துகிறது. ஐந்து வார்த்தை வசனங்களில் மூன்று வார்த்தை அமெரிக்கர்களின் பிரபலமான கெட்ட வார்த்தைதான் வருகிறது (கொஞ்சம் சகிக்கல) . கதாநாயகி வய்நெத் பல்ட்ரா (Gwyneth Paltrow) பார்க்க அழகிதான் (ஹி ஹி.. ஹி..). ஆனாலும் நடிக்க வாய்ப்புகள் குறைவே. இவர்கள் வசிக்கும் அபார்ட் மேண்டின் கீழ் ஓடும் மெட்ரோ ரயிலினால் அந்த அபார்ட் மென்டே அதிரும் போது சிரிக்கும் குவ்ய்நேதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நல்ல த்ரில்லர் படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.

படம் 1995- இல் வெளிவந்து $327  அமெரிக்க டாலர்களை அள்ளி குவித்தது (தகவல் உபயம்-விக்கிபீடியா). படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இரண்டு மணி நேரமும் விறுவிறுப்பு  குறையாமல்  கதையை நகர்த்தி இருப்பதுதான். தவறாமல் பார்க்கவேண்டிய படம். படத்தின் ட்ரைலர் கிழே !!


அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தோடு உங்களை சந்திக்கிறேன்

Monday, February 27, 2012

ஆஸ்கார் விருதும் அழகிகளும்

84 வது ஆஸ்கார் விருது விழா நேற்றுதான் லொஸ் அங்கெல நகரில் நடந்து முடிந்தது. விருது பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ஹுகோ (Hugo) மற்றும் ஆர்டிஸ்ட் (The Artist) படங்கள் தலா ஐந்து விருதுகளை அள்ளின.

'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது.  ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்'  (The Decedents) படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சரி விருது வழங்கும் விழாவுக்கு முன்  red carpet மீது நடந்து வரும் அழகிகளைதான் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள் (ஹி ஹி ஹி... நான் எதிர்பார்ப்பேன்). தேடி பார்த்ததில் கோசம் கிடைச்சது. யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவுலகமும்.





(Black  Swan) படத்தின் நாயகி நடாலி போர்ட்மன் 
















 ஜெனிபர் லோபெஸ்ங்கோ!!!















"The Pirates of Carribean" படத்தின் பப்பாளி "Penople Cruz"

















"The Lady with Dragon Dattoo" படத்தில் நடித்த "Rooney Mara"
















"Speed" படத்தின் நாயகி "Sandra Bullock"







 


 

 

Brad Pitt & Angelina Joli



 

 

சமீபத்தில் வெளிவந்த "The Bad Teacher"  படத்தின் நாயகி "Cameron Diaz" 





 

 

"The Decendents" படத்தின் கதாநாயகன் "George Clooney" மற்றும் "Stacy Keibler"

 

 

"The Decendents" படத்தில் "George Clooney" மகளாக நடித்த "Shailene Woodley "



 

 

 இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.  அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

Thursday, February 9, 2012

தி லாஸ்ட் கிங் அப் ஸ்காட்லாந்து /The last king of Scotland/ஹாலிவூட் சினிமா விமர்சனம்


உலக சரித்திரத்தை புரட்டி போட்டால் இரண்டு வகையான மனிதர்களை சரித்திரம் நினைவில் வைத்திருக்கிறது. ஒன்று காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற நல்லவர்கள் மற்றொன்று ஹிட்லர், முசோலினி, மற்றும் இடி அமின் போன்ற கெட்டவர்கள். இரண்டு வகையை சேர்ந்த மனிதர்களையும்தான் சரித்திரம் நினைவில் இருத்தி வைத்து இருக்கிறது. இதில் இடி அமினின் கதை கொஞ்சம் சுவாரசியமானது. 

 2005 -இல் "தி லாஸ்ட் கிங் அப் ஸ்காட்லாந்து" (The last king of Scotland ) என்றொரு படம் " ஜைல்ஸ் போடன் " (Giles Foden) என்பவர் இதே பெயரில் எழுதிய நாவலை மையமாகக்கொண்டு கெவின் மெக்டோனல்ட் (Kevin McDonald) இயக்கிய படம். நிறைய உண்மையையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட இந்த நாவல் இடி அமின் ஆட்சியை பிடித்ததில் இருந்து, உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் பாலஸ்தீன இயக்கம் ஒன்றால் கடத்தி பிணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த இஸ்ரேலியர்களை விடுவித்து செல்லும் வரைக்கும் இடைப்பட்ட சம்பவங்களை வைத்து படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. 

 படத்தின் கதை கோர்வையாக சொல்ல இயலாவிட்டாலும், ஸ்காட்லாந்தில் மருத்துவ படிப்பை முடித்து உகண்டாவில் சேவை செய்ய கிளம்பும் நிக்கோலஸ் கர்ரேகன் (Nicholas  Garrigan ) ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இடி அமினுக்கு (Forest Whittakker) உதவி செய்ய, பின் இடி அமினீனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் தனி மருத்துவ ஆலோசகராக நியமிக்கபடுகிறார். 

மருத்துவ ஆலோசனைகள் மட்டுமின்றி அரசியல் ஆலோசகராகவும் மாறிப்போகும் நிக்கோலஸ், இடி அமீனின் மூன்றாவது மனைவி கே (Kerry Washigton) உடன் உறவு கொண்டு கர்ப்பமாக்கி  விடுகிறார். இதற்கு  நடுவில் அமீனின் இருண்ட முகம் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மூலம் நிக்கோலசுக்கு தெரிய வருகிறது. தனக்கு எதிரி எனப்பட்டால் தன் மந்த்ரி முதல் கடை நிலை மனிதர் வரை கொலை செய்து விடும் இடி அமின் தன் மனைவி கர்ப்பம் என்றால் விடுவாரா??? "நிக்கோலஸ்" மற்றும் "கே" என்ன ஆனார்கள் என்பதை நீங்களே படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். !!!

 
இடி அமீனாக நடித்திருக்கும் ஹாலிவூட் நடிகர் பாரெஸ்ட் விட்டகேர் (Forest Whitaker) எனக்கெனவோ நடித்தது போல் இல்லை இடி அமீனாகவே வாழ்ந்திருக்கிறார். நையாண்டி செய்யும்போதும், கொலை செய்யும்போதும் வெவ்வேறு பரிமாணகளில் அவர் முக பாவம் அசத்தல். தன் மகனுக்கென "Scotland " என பெயரிடப்பட்ட t -சர்ட்டை கேட்டு வாங்குவதும், தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீது சந்தேகப்பட்டு கொள்ளும்போதும் நமக்கே பாரெஸ்ட் விட்டகேர் மீது வெறுப்பு வரும். இந்த படத்திற்கென கோல்டன் க்ளோப் மற்றும் BAFTA என்ற  இரண்டு விருதுகளையும் சிறந்த நடிகருக்கென வாங்கினார்.
அடுத்து சொல்லிகொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் நிக்கோலஸ் கதாப்பாத்திரத்தில்  நடித்த ஜேம்ஸ் (James MacAvoy) தான். ஒரு நாட்டின் அதிபருக்கு ஆலோசகர் என்ற பதவி இருந்தும் அதை வெறுப்பதும் , இடி அமீனின் மனைவியையே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதை அழிக்க முடியாமல் தவிப்பதும், தன் பாஸ்போர்டை மாற்றி உகாண்டா நாட்டின் பாஸ்போர்டை கொடுக்கும்போது தன் இயலாமையை நினைத்து மருகுவதும்  நல்ல நடிப்பு. 

அடுத்து என்னை கவர்ந்தது, வெள்ளை மட்டுமே அழகு என்று நினைப்பவர்கள், இடி அமீனின் மூன்றாவது மனைவியாக நடித்திருக்கும் கெர்ரி வாஷிங்டனை பார்த்து தன் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பும் உண்டு. இந்த அம்மணி பற்றி கொஞ்சம் நீளமாக எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன், அப்புறம் நம்மளை வேற மாதிரி பதிவர்னு யாரும் நினைக்க கூடாதுன்னு இதோட நிறுத்திக்கறேன். அது மட்டுமின்றி பதிவு ரொம்பவே நீளமாகிக்கொண்டே போகிறது. 




இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள் . படத்தின் ட்ரைலர் கிழே !!!


அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்துடன் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்