உலக சரித்திரத்தை புரட்டி போட்டால் இரண்டு வகையான மனிதர்களை சரித்திரம் நினைவில் வைத்திருக்கிறது. ஒன்று காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற நல்லவர்கள் மற்றொன்று ஹிட்லர், முசோலினி, மற்றும் இடி அமின் போன்ற கெட்டவர்கள். இரண்டு வகையை சேர்ந்த மனிதர்களையும்தான் சரித்திரம் நினைவில் இருத்தி வைத்து இருக்கிறது. இதில் இடி அமினின் கதை கொஞ்சம் சுவாரசியமானது.
2005 -இல் "தி லாஸ்ட் கிங் அப் ஸ்காட்லாந்து" (The last king of Scotland ) என்றொரு படம் " ஜைல்ஸ் போடன் " (Giles Foden) என்பவர் இதே பெயரில் எழுதிய நாவலை மையமாகக்கொண்டு கெவின் மெக்டோனல்ட் (Kevin McDonald) இயக்கிய படம். நிறைய உண்மையையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட இந்த நாவல் இடி அமின் ஆட்சியை பிடித்ததில் இருந்து, உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் பாலஸ்தீன இயக்கம் ஒன்றால் கடத்தி பிணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த இஸ்ரேலியர்களை விடுவித்து செல்லும் வரைக்கும் இடைப்பட்ட சம்பவங்களை வைத்து படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் கதை கோர்வையாக சொல்ல இயலாவிட்டாலும், ஸ்காட்லாந்தில் மருத்துவ படிப்பை முடித்து உகண்டாவில் சேவை செய்ய கிளம்பும் நிக்கோலஸ் கர்ரேகன் (Nicholas Garrigan ) ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இடி அமினுக்கு (Forest Whittakker) உதவி செய்ய, பின் இடி அமினீனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவரின் தனி மருத்துவ ஆலோசகராக நியமிக்கபடுகிறார்.
மருத்துவ ஆலோசனைகள் மட்டுமின்றி அரசியல் ஆலோசகராகவும் மாறிப்போகும் நிக்கோலஸ், இடி அமீனின் மூன்றாவது மனைவி கே (Kerry Washigton) உடன் உறவு கொண்டு கர்ப்பமாக்கி விடுகிறார். இதற்கு நடுவில் அமீனின் இருண்ட முகம் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மூலம் நிக்கோலசுக்கு தெரிய வருகிறது. தனக்கு எதிரி எனப்பட்டால் தன் மந்த்ரி முதல் கடை நிலை மனிதர் வரை கொலை செய்து விடும் இடி அமின் தன் மனைவி கர்ப்பம் என்றால் விடுவாரா??? "நிக்கோலஸ்" மற்றும் "கே" என்ன ஆனார்கள் என்பதை நீங்களே படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். !!!
இடி அமீனாக நடித்திருக்கும் ஹாலிவூட் நடிகர் பாரெஸ்ட் விட்டகேர் (Forest Whitaker) எனக்கெனவோ நடித்தது போல் இல்லை இடி அமீனாகவே வாழ்ந்திருக்கிறார். நையாண்டி செய்யும்போதும், கொலை செய்யும்போதும் வெவ்வேறு பரிமாணகளில் அவர் முக பாவம் அசத்தல். தன் மகனுக்கென "Scotland " என பெயரிடப்பட்ட t -சர்ட்டை கேட்டு வாங்குவதும், தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீது சந்தேகப்பட்டு கொள்ளும்போதும் நமக்கே பாரெஸ்ட் விட்டகேர் மீது வெறுப்பு வரும். இந்த படத்திற்கென கோல்டன் க்ளோப் மற்றும் BAFTA என்ற இரண்டு விருதுகளையும் சிறந்த நடிகருக்கென வாங்கினார்.
அடுத்து சொல்லிகொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவர் நிக்கோலஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜேம்ஸ் (James MacAvoy) தான். ஒரு நாட்டின் அதிபருக்கு ஆலோசகர் என்ற பதவி இருந்தும் அதை வெறுப்பதும் , இடி அமீனின் மனைவியையே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு அதை அழிக்க முடியாமல் தவிப்பதும், தன் பாஸ்போர்டை மாற்றி உகாண்டா நாட்டின் பாஸ்போர்டை கொடுக்கும்போது தன் இயலாமையை நினைத்து மருகுவதும் நல்ல நடிப்பு.
அடுத்து என்னை கவர்ந்தது, வெள்ளை மட்டுமே அழகு என்று நினைப்பவர்கள், இடி அமீனின் மூன்றாவது மனைவியாக நடித்திருக்கும் கெர்ரி வாஷிங்டனை பார்த்து தன் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பும் உண்டு. இந்த அம்மணி பற்றி கொஞ்சம் நீளமாக எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன், அப்புறம் நம்மளை வேற மாதிரி பதிவர்னு யாரும் நினைக்க கூடாதுன்னு இதோட நிறுத்திக்கறேன். அது மட்டுமின்றி பதிவு ரொம்பவே நீளமாகிக்கொண்டே போகிறது.
இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள் . படத்தின் ட்ரைலர் கிழே !!!
அடுத்து ஒரு நல்ல படத்தின் விமர்சனத்துடன் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்





No comments:
Post a Comment