Wednesday, July 25, 2012

Holiday in handcuffs/ ஹாலி டே இன் ஹான்ட் கப்ஸ் /ஹாலிவுட் சினிமா விமர்சனம்

சில நேரங்களில் எதிர்பாராத தருணங்கள் அல்லது விஷயங்கள் உங்களை சந்தோசத்தின் அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விடும். எதிர்பார்க்காமல் சந்திக்கும் புதிய மனிதர்கள் உங்களின் வாழ்க்கை பாதையையே மாற்றி போட்டுவிடலாம். இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருவது ஒன்றுதான் "அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம் " என்பதுதான். அதை மெய்ப்பிக்கிற மாதிரியான ஒரு படம் தான் இது !

ரொமாண்டிக் காமெடி வகை படங்களின் இன்னொரு வகையான பரிமாணம் தான் இந்த படம். உண்மையில் எனக்கு தோன்றுவதுண்டு எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறார்கள் படம் எடுக்க என்று. என் நண்பர் ஒருவரின் பரிந்துரைப்பின் பேரில் பார்த்த படம் என்றாலும் என்னை ஏமாற்ற வில்லை. இது முழுமையான ஹாலிவுட் படமல்ல, இது ஒரு டெலிவிசன் மூவி .


படத்தின் கதையை ரொம்பவும் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். "ட்ருடி" ஒரு உணவகத்தில் பரிமாறுபவராக பணிபுரிகிறாள். ஆனாலும் இவளுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆர்வம். இந்த தடவை கிறிஸ்மஸ் அன்று தனது காதலனோடு அவள் அப்பா அம்மாவை சந்திப்பதாக வாக்குறுதி கொடுக்கிறாள். ஆனால் அதே நாள் அவளை விட்டு பிரிந்து செல்வதாக சொல்கிறான். செய்வதையாது திகைக்கும் ட்ருடி, அந்த உணவகத்துக்கு வந்திருக்கும் டேவிடை துப்பாக்கி முனையில் கடத்தி செல்கிறாள் அவள் பெற்றோருடன் கிறிஸ்மஸ் கொண்டாட. மீதி கதையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் !!!

 படத்தின் பலமே ட்ருடீயாக நடித்திருக்கும் (Mellisa Joan Hart) தான் என்றால் அது மிகை  இல்லை. முதல் காட்சியிலே எவ்ளோ சோம்பேறி அப்படின்னு புரிஞ்சிடும். சாப்பாட்டை  சூடாக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தும் ஒரு காட்சி. டேவிடை கடத்தி போய்  வீட்டில் விட்டு வீட்டில் ட்ருடீயின் அம்மா அப்பா என எல்லோரும் டேவிடை பிடித்து போக டேவிடிடமே " என் வீட்டில் என்னை விட எல்லோருக்கும் உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு என பொறாமைப்படும் காட்சி.

 ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்கள் அதை சுவாரசியமாக சொன்ன திரைக்கதை என பார்க்கும் ரசிகனை சங்கடபடுத்தாமல் சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம். இன்னொரு பலம் என்றால் அது பாத்திர தேர்வு, எல்லா கதாபாத்திரங்களும் இந்த கதைக்கு நூறு சதவீதம் பொருத்தம். டேவிட் , ட்ரூடி மீது காதல் கொள்ள வரும் காட்சிகள் நம்பும்படியாகவும் , ரசிக்கும்படியாகும் இருக்கு. படத்தை முதலில் பார்க்க ஆரம்பித்தபோது பெரியளவில் என்னை கவரவில்லை என்பது உண்மை, ஆனாலும் முடிவில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு!!!


 முழு படமும் you tube கிடைக்கிறது அதன் இணைப்பை கிழே   கொடுத்துள்ளேன்

Monday, July 16, 2012

தி ஹாலி டே/ஹாலிவூட் சினிமா விமர்சனம்

காதலால் ஏற்படும் சந்தோசங்களை விட அது தரும் வேதனை அதிகம். காதலனோ/காதலியோ கிடைக்கும்போது ஏற்பாடு சந்தோசங்களை விட அவர்களின் பிரிவு தரும் கஷ்டம் அதை உணர்ந்தவர்களுக்கே புரியும். என்ன காதலை பத்தி ஓவரா பீலா விடுற மாதிரி இருக்கேன்னு கடுப்பாக வேணாம். இந்த படத்தின் கதை அப்படி.

கதையை சுருக்கமா சொல்லிடறேன், ரெண்டு பெண்கள் அவங்க காதலர்களால் பிரச்சினை, ஒருத்தர் அமெரிக்கால இருக்கார் (கமரூன் டியஸ்) இன்னொருத்தர் இங்கிலாந்தல இருக்கார் (கதே வின்ஸ்லெட்). இரண்டு பேரும் வீட்டை ரெண்டு வாரத்துக்கு மட்டும் மாத்திக்க முடிவு பண்ணி கெளம்பி போறாங்க. போற இடத்துல ரெண்டு பேருக்கும் புது காதலர்கள் கிடைக்க முடிவு சுபம்.

கதை ரெண்டு வரில சொல்லிட்டாலும் படம் நமக்குள்ள ஒருவித குதூகலத்தை கொண்டு வரும் அப்படிங்கறதுல சந்தேகமே இல்லை, நமக்கு புடிச்ச பொருளோ இல்லை வாலிப வயதில் வரும் காதலோ அந்த மாதிரி  ஒரு உற்சாகம். ரெண்டு பெண் பாத்திரமும் வித்தியாசமா காட்டி இருக்கும் இயக்குனர்  அவருக்கு பெரிய பாராட்டுதல்கள். இரண்டு பேரில் என்னை ரசிக்க வைத்தது கமரூன் மட்டுமே. வித்தியாசமான முக பாவங்களை மாற்றி கொள்வது ரொம்பவே அழகு.

கதேவுக்கு ரொம்ப பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், அந்த டைட்டானிக்  அழகி அடிக்கடி மனதிற்குள் வந்து போவதால், படத்தோடு  ஒட்டி ரசிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த பாத்திரத்திற்கு  வேறு யாரையும் பொருத்தி பார்க்கவும் இயலாது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து கமரூன் வீட்டில் நுழைந்தவுடன் இவர் அடையும்  பரவசம் ரொம்ப சிறப்பு .

கமரூன் டைஸ் , இந்த படத்தில் வழக்கமான நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருக்கிறார். தன்  காதலன் இன்னொரு பெண்ணுடன்  தொடர்பு வைத்திருப்பதை அறிந்து அவனை வெளியில் தள்ளி விட்டு கோபப்படுவது  ரசிக்கலாம். முதல் பாதியை  விட இரண்டாம் பாதியில் இன்னும் ரசிக்கலாம்.

படத்தின் இயக்குனர் "நான்சி மேயர்", பெண் இயக்குனர் என்பதால் மெல்லிய பெண் உணர்வுகளை படம் பிடித்திருப்பது  அழகு. இரண்டும் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்திருந்தாலும் அதை வித்தியாச படுத்தி கட்சி அமைத்ததர்க்கே இயக்குனரை பாராட்டலாம். ஆனாலும் விக்ரமன் பட பாணியில் சில காட்சிகள் (ஒரு பாட்டில் பணக்காரன் ஆகும் கதாநாயகன்) இருந்தாலும் மனம் விட்டு ரசிக்கலாம். மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு படம். என்னை மாதிரி ரொமாண்டிக் காமெடி படத்தை ரசிப்பர்வர்களுக்கு இது ஒரு நல்ல படம்.

படத்தின் முன்னோட்ட காணொளியை இணைத்துள்ளேன் !!!